சத்தியமங்கலம் தவளகிரி-எங்க மண்ணு தங்க மண்ணு
சத்தியமங்கலம் தவளகிரி-எங்க மண்ணு தங்க மண்ணு
மஞ்சளுக்கு சிறப்பு பெற்ற மாநகரில் புறநானூற்றில் குறிப்பிட்டுள்ள “வெண்குன்று” அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது “தவளகிரி” கோவில். துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது பவானி நதியினை அவர் கடக்கும்போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது.முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார். உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார்.
முருகப்பெருமானே தனக்கு வழிவகுத்தார் என எண்ணினார். அதற்காக மலை உச்சியில் முருகர் சிலை வைத்து பூஜை தொடங்கினார் .அதுவே தவளகிரியாயிற்று. விஜயநகரக் காலத் திருப்பணி செய்யப்பட்ட கோவில் என்ற சிறப்பும் உள்ளது. இக்கோவில் “மலைக் கோவில்” என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு மலைக் கோவில் என்றால் தான் உடனடியாகப் புரியும். குன்றின் மீது இருந்து பார்த்தால் அட! நம்ம ஊர் இவ்வளவு அழகா ! என்று வியப்பாக இருக்கும்.எங்கே பார்த்தாலும் மரங்களே! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இருக்கிறது. சத்தி நகரமே காட்டுக்குள் இருப்பது போலத் தெரியும்.
இத்திருக்கோவிலுக்கு இரண்டுவிதமான வழிகள் உள்ளன. படிக்கட்டு வழியாகவும் திருக்கோவிலை அடையலாம். முடியாதவர்கள் வாகனங்களில் செல்லும் சாலை வசதியும் உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் படிக்கட்டு வழியாக சென்றால் பலன் அதிகம் என்ற காரணத்தால் படிகட்டுகளைப் பயன் படுத்துகின்றனர்.சத்தியமங்கலத்தின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று.
நம் வரலாற்றை அறிவோம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
picture courtesy : giriblog ,tamilnadu tourism
featured image courtesy : dreamstime.com