சர்வதேச மகளிர் தின விழா
சர்வதேச மகளிர் தின விழா
வேராகி, விழுதாகுபவள்
போராடி நிதம் வாழ்தல்
பொறுக்காது இப்பூமி!
ஊரோடின் ஒத்தோடி
ஓர்நாள் வாழ்த்தோடமையாது
ஓர்பாதி என்றவளை
எந்நாளும் ஏத்துவம்மின்!
இந்த உலகத்தில் உடல் உறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். சவால்களை தகர்த்து சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும் உயர்வான எண்ணங்களும் வலிமையான ஊக்கமும் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பார்போற்றும் பூமகள் ஆயிரமாயிரம்.
ஒரு தாயாய், மகளாய், இல்லத்தரசியாய், சகோதரியாய், தோழியாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய், காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்ட முடியுமா?
அன்பு ஆதரவு அடக்கம் இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனித குலத்தில் வாழும் இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண். அத்தகைய பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா மார்ச் 8, 2019 வெள்ளிக்கிழமை அன்று பண்ணாரி அம்மன் கல்லூரி கலைஅரங்கத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி அறங்காவலர் திரு. எம். பி. விஜயகுமார், கல்வி தலைவர் திரு. தங்கராஜ், முதல்வர் திரு. சி. பழனிச்சாமி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் திருமதி. எஸ். புவனேஸ்வரி, திருமதி. காளிகாசெல்வி லெனின், திருமதி. எஸ். பி. ஸ்ரீவள்ளி ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் திரு. சி. பழனிச்சாமி அவர்கள் விழாவிற்கு
வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். பின்னர் கல்லூரி தலைவர் திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அதில் அவர் உலகில் ஆணாதிக்கத்தை ஒழித்து பெண்களின் சமநிலையை வலியுறுத்தவே சர்வதேச அளவில் மகளிர் தினம் கொண்டாடப்படுவதாகவும், பெண்களின் இன்றைய வளர்ச்சி பற்றியும் கூறினார். மேலும் இக்காலப் பெண்கள் ஓளவையார், ஜான்சிராணி, காரைக்கால் அம்மையார், போன்ற அக்காலப் பெண்களை முன்னோடியாக கொண்டு வாழ வேண்டும் என கூறினார். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களான முன்னாள் மாணவிகள் மூவரையும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக எடுத்துரைத்து பாராட்டினார். இவ்வுலகில் பெண்கள் இல்லாமல் எதுவும் இல்லை என்றும் பெண்கள் இன்று வேலைவாய்ப்பு, திருமணம், குடும்ப வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, ஆகியவற்றில் தங்களுக்கான உரிமையையும், தங்களுக்கென தனி இடத்தையும் பெற்றுள்ளதாக கூறினார்.
இதை தொடர்ந்து கல்லூரியின் அறங்காவலர் திரு. எம். பி. விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினர். அவர் இவ்விழாவை ஒரு குடும்ப விழாவாக கருதுவதாக கூறினார். மேலும் அவர் குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு தவிர பெண்களுக்கும், ஆண்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை எனவே வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம உரிமையும், சம மரியாதையையும் வழங்க வேண்டும் எனக் கூறினார். குழந்தை வளர்ப்பின் போது ஆண் பெண் இருபாலருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். இனி வரும் காலங்களில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது, தங்கள் துணையிடம் விருப்பங்களை பகிர்ந்து ஒரு நல்ல புரிதலுடன் துணையை தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். மேலும் மாணவர்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சிகள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கள் திறமைகளையும், கல்வி திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முன்னாள் மாணவிகள் திருமதி. எஸ். புவனேஸ்வரி, திருமதி. காளிகாசெல்வி லெனின், திருமதி. எஸ். பி. ஸ்ரீவள்ளி ஆகியோருக்கு கல்லூரி தலைவர், திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதை தொடர்ந்து திருமதி. எஸ். புவனேஸ்வரி அவர்கள் ஏற்புரை
வழங்கினார். அதில் அவர் கல்லூரி தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். பின்னர் அவர் தனது உரையில் பெண்கள் தங்கள் வாழ்நாளை இடஒதுக்கீட்டிற்கும், சம உரிமைக்காகவும் சண்டையிட மட்டுமே செலவிடக் கூடாது எனவும் பெண்கள் தங்கள் வாழ்வில் சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன எனவும், பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யும் உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் ஆண்கள் தங்கள் வாழ்நாளில் தங்களின் நலத்திற்காகவும், வெற்றிக்காகவும் உதவியாய் இருக்கும் அனைத்தை பெண்களையும் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பெண்களும் தங்கள் வெற்றிக்கும், தங்கள் முயற்சிக்கும் உறுதுணையாய் இருக்கும் அனைத்து ஆண்களையும் பாராட்டு கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து அடுத்து ஏற்புரை வழங்கிய திருமதி. காளிகாசெல்வி லெனின் அவர்கள் அக்காலத்தில் இயந்திரவியல், வானியல் துறைகளில் பெண்கள் மிக குறைந்த அளவே பயின்றதாகவும், தற்காலத்தில் பல பெண்கள் அனைத்துத் துறைகளிலும் திறமைமிக்கவர்களாக மிகப்பெரிய பதவிகளில் பணியாற்றுவதாகவும் கூறினார். மேலும் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை பலவீனமாக நினைக்க கூடாது எனவும் எந்த நிலையிலும் சாதித்துக் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
அவரை தொடர்ந்து திருமதி. எஸ். பி. ஸ்ரீவள்ளி அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதில் அவர் பெண்கள் தங்கள் தேவைகளுக்காக எப்போதும் வேண்டிக் கொண்டு இருக்காமல் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென கூறினார். மேலும் எதிர்கால சமுதாயத்தை நல்ல முறையில் மாற்றி அமைக்க ஏற்றவாறு குழந்தைகளை வளர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்
இதை தொடர்ந்து விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. இறுதியாக கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. A. பாரதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். அதில் அவர் விழாவில் பங்கேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இல்லத்தலைவியாக மட்டுமே இருந்த அன்றைய பெண்கள் இன்று நாட்டின் தலைவியாகவும், உலகத்தின் முதல்வியாகவும், ஆண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலையை அடைய தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்து இருக்கின்றனர்.
அதேவேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் கொடிய அவல நிலை இன்னும் உலகில் நீங்கியபாடில்லை. படிக்கின்ற இடங்கள், பணிபுரிகின்ற இடங்கள், பொது இடங்கள், வீடுகளிலும் கூட பெண்களுக்கு எதிராக வன்முறைகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை களைய வேண்டும் என்றால் பெண்களை கண்ணியத்துடன் மதிக்க வேண்டிய நெஞ்சார்ந்த உணர்வினை ஆண் சமூகம் பெற்றாகவேண்டும். தாமும் ஒரு பெண்ணாகிய தாய் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்த படைப்பினம் தான் என்பதை உணர வேண்டும் ஆகவே பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்ந்தவர்களாக பெண்ணியம் காக்க இன்றே உறுதி ஏற்போம்.